கொட்டடிகுளத்தில் மீன்பிடி திருவிழா
கொட்டடிகுளத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
விராலிமலை தாலுகா ராமகவுண்டம்பட்டி கிராமத்தில் கொட்டடிகுளம் உள்ளது. இங்கு 20 வருடங்களுக்கு முன்பு மீன்பிடி திருவிழா நடைபெற்றது. கடந்த வருடம் பெய்த கனமழையால் இக்குளமானது நிரம்பியது. தற்போது இக்குளத்தில் தண்ணீர் வற்றிய நிலையில் மீன்பிடி திருவிழா நடத்துவது என ஊர் பொதுமக்கள் சார்பாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை மீன்பிடி திருவிழாவானது நடைபெற்றது. 20 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடி திருவிழா நடைபெறுவதால் விராலிமலை, விராலூர், கசவனூர், கொடும்பாளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொட்டடி குளத்தில் ஒன்று திரண்டனர். இதனையடுத்து குளத்தின் அருகே உள்ள அய்யனார் கோவிலில் பூைஜகள் நிறைவடைந்ததையடுத்து குளக்கரையில் தயாராக நின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வலை, தூரி, கச்சா, பரி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கொண்டு போட்டி போட்டுக் கொண்டு அனைவரும் மீன்களை பிடிக்க குளத்தில் இறங்கினர். இதில் கட்லா, கெண்டை, குரவை, விரால், ரோகு, மீசை கெழுத்தி உள்ளிட்ட மீன்களை பொதுமக்கள் பிடித்து சென்றனர். குளத்தில் சீமைக்கருவேல முட்கள் அதிகமாக இருந்ததால் மீன்களை பிடிப்பதில் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஒரு சிலருக்கு மட்டுமே பெரிய வகை மீன்கள் பிடிபட்டது. சிலருக்கு மீன்கள் அதிகம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இங்கு பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.