மீன்பிடி தடைக்காலத்தை மாற்றி அமைக்க வேண்டும்: அசைவ பிரியர்கள் கருத்து
மீன்பிடி தடைக்காலத்தை மாற்றி அமைக்க வேண்டும் என அசைவ பிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை அரசு அறிவிக்கிறது. நடப்பாண்டு கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதியில் இருந்து நாளை மறுநாள் (புதன்கிழமை) வரை இந்த தடை அமலில் இருக்கும்.
32 மீனவ கிராமங்கள்
இந்த காலகட்டத்தில் 240 குதிரை திறன் கொண்ட விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என அரசு அறிவுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மணமேல்குடி, கட்டுமாவடி, மீமிசல் உள்பட 32 மீனவ கிராமங்கள் உள்ளன. சுமார் 42 கிலோ மீட்டர் கடற்கரை பகுதியாகும். இங்கு 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் உள்ளன.
இதில் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் ராமேசுவரத்தை தாண்டி மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இந்த பகுதியில் வஞ்சிரம், நகரை நெத்திலி, சீலா, ரால், கணவாய் உள்ளிட்ட மீன்வகைகள் அதிகமாக சிக்கும். ஜெகாதப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளன.
ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரையுள்ள பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. அவற்றில் 590 மீனவ கிராமங்களில் இருந்து ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தற்போது தடை உள்ளது. மீதம் உள்ள சில கிராமங்கள் மேற்கு கடற்கரையில் வருவதால் அவர்களுக்கு மீன்பிடி தடைகாலம் கிடையாது. தமிழகத்தில் உள்ள மீன்பிடி தடைக்காலம் மீனவர்களுக்கும், மீன்களுக்கும் பொருத்தமாக இல்லை என்பதால் அரபிக்கடல் பகுதிகளில் உள்ள மாநிலங்களில் இருப்பது போன்று அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் சங்கத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து மீனவர்கள் அமைப்புகள் மற்றும் அசைவ பிரியர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் அளித்த கருத்துகள் வருமாறு:-
விலை கட்டுக்குள் இருக்கும்
கரூரில் மீன் விற்பனை செய்து வரும் வியாபாரி நாசர், மீன்பிடி தடை காலம் என்பது கடந்த பல ஆண்டுகளாக 1½ மாதம் இருந்து வந்தது. தற்போது 2 மாதமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் மீன்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. எனவே மீன்பிடி தடைகாலத்தை மீண்டும் 1½ மாதம் அளவிற்கே இருக்கும் வகையில் மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும். மீன்களின் வரத்தும் தொடர்ந்து இருக்கும். விலையும் சற்று கட்டுக்குள் இருக்கும்.
வாழ்வாதாரம் பாதிக்கப்படும்
குளித்தலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சந்திரசேகர்:- மீன்பிடி தடைக்காலம் என்பது பல ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த நாட்களில் மீன்களை மீனவர்கள் பிடிக்கச் செல்வதில்லை. மீன்களின் இனப்பெருக்கமானது மீன்பிடி தடை அறிவிக்கப்பட்ட மாதங்களில் அதிகப்படியாகவே இருக்கும். அப்போது மீன்பிடித்தால் மீன்களின் இனப்பெருக்கம் குறைவதோடு மீன்களின் எண்ணிக்கை குறைய அதிக வாய்ப்பு உள்ளது. கடலில் மட்டுமல்ல ஆறு, குளங்கள், ஏரி போன்றவற்றில் வாழும் மீன்களும் இனப்பெருக்கம் செய்யக்கூடிய காலம் இது. அந்த மாதங்களைத் தவிர மற்ற மாதங்களில் மீன்கள் இனப்பெருக்கம் என்பது குறைவாகவே இருக்கும். கடலில் தடை காலங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாது. ஆனால் ஆறு போன்ற நீர் நிலைகளில் மீன்கள் பிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆற்றில் தண்ணீர் அதிக அளவு வரும் பொழுது ஆற்றில் மீன் பிடிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதிகளவு தண்ணீர் செல்லும் பொழுது வலையைவிட்டு மீன் பிடிக்க இயலாது. அது போன்ற காலங்களில் கூலி வேலைக்கு மீனவர்கள் செல்கின்றோம்.
தடைக்கால மாதத்தை மாற்ற வேண்டும்
புகழூரை சேர்ந்த நல்லசாமி:-
கடல் பகுதியில் ஏப்ரல், மே மாதங்களில் மீன்பிடி தடைக்காலம்மாக இருப்பதால் அந்த நேரங்களில் மீன்கள் பிடிப்பதில்லை. இதனால் அந்த நேரங்களில் எங்கள் பகுதிக்கு வரும் மீன்களின் விலை மிக உயர்வாக இருக்கும். விலை அதிகமாக இருந்தாலும், மீன்களை விரும்பி சாப்பிடும் எங்களை போன்றவர்கள் அதிக விலைக்கு அதனை வாங்கி சாப்பிட வேண்டிய கட்டாயமாக உள்ளது. இதனால் பள்ளி விடுமுறை மாதங்களான ஏப்ரல், மே மாதங்களில் மீன்களின் விற்பனை அதிகரிக்கும். அந்த நேரத்தில் மீன் தடைக்காலம் என்பதால் சில நேரங்களில் மீன்கள் பற்றாக்குறையாக கூட இருக்கும். எனவே மீன்பிடி தடை காலத்தை வேறு மாதங்களில் மாற்ற தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
விலை அதிகமாக இருக்கிறது
ஜெகதாபியை சேர்ந்த பூபதி:- இன்று கடல் மீன்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறு குக்கிராமங்களில் கூட விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் ஆண்டு முழுவதும் மீன் பிடிக்கப்படுவதால் அதன் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டும், மீன்பிடி தடை காலம் ஏப்ரல், மே மாதங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயப் பணிகள் முடிந்து கோடைக்காலத்தில் தான் அதிக அளவில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
அப்போது அசைவ பிரியர்கள் அதிக அளவில் விரும்புகின்றனர். இந்த காலக்கட்டத்தில் தடைக்காலம் இருப்பதால் விற்பனைக்கு வரும் மீன்களின் வரத்து குறைந்து அதன் விலை அதிகமாக இருக்கிறது. எனவே மீன்களின் இனப்பெருக்க காலத்தை ஆய்வு செய்து துல்லியமாக கணக்கிட்டு அந்த நாட்களில் மீன்பிடி தடைக்காலமாக கொண்டு வரலாம்.
மாதங்களை மாற்ற வேண்டும்
தோகைமலை அருகே உள்ள நாகநோட்டக்காரன் பட்டியை சேர்ந்த ரவி:-
ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதாலும், வெளியூர்களில் பணி புரியக்கூடியவர்கள் விடுமுறைக்காக உள்ளூர் திரும்புவதால் இந்த மாதங்களில் மீன்களின் தேவை அதிகமாக இருக்கும். இந்த மாதங்களில் முகூர்த்த நாட்களும் அதிகமாக இருப்பதால் மீன்கள் அதிகமாக தேவைப்படுகிறது. தற்போது மீன்பிடி தடைக்காலத்தால் மீன்கள் விலை அதிகமாக இருக்கிறது. இதனால் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் அதிக விலை கொடுத்து மீன்களை வாங்கி சாப்பிடுவதில்லை. இதனால் மீன்தடை காலத்தை மற்ற மாதங்களுக்கு மாற்ற வேண்டும்.
அறிவியல்பூர்வ ஆய்வு
தமிழக மீன்வளத்துறை இணை இயக்குனர் (ஓய்வு) தில்லைகோவிந்தன்:- 'கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இக்காலக்கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் விசை படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டும் திருவள்ளூர் தொடங்கி கன்னியாகுமரி வரை மீனவர்கள் இந்த காலத்தில் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். ஏப்ரல் முதல் ஜூன் வரை மீனவர்கள் தங்கள் விசை படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். பொதுவாக மீன்கள் ஒரு இடத்தில் இல்லாமல் உணவைத் தேடி எப்போதும் வெவ்வேறு இடங்களுக்கு சென்று கொண்டே இருப்பது வாடிக்கைதான். இனப்பெருக்கத்திற்காகவும், மீன் உற்பத்தி அதிகரிப்பதற்காகவும் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து நாடு முழுவதும் உள்ள கடலோர பகுதிகளில் மீன்பிடி தடைக்காலத்துக்கான மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் காலநிலை மாற்றத்தால் தற்போது கடல்களில் மீன்கள் கிடைப்பதிலும் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக அரபிக்கடல் பகுதியில் கிடைக்கும் சாளை மீன்கள் தற்போது அதிகளவில் வங்காள விரிகுடா கடல் பகுதிகளிலும் கிடைக்கிறது. எனவே மீண்டும் அகில இந்திய அளவில் ஒரு பெரிய அளவில் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வரலாம். மாறாக அனுபவ பூர்வமாக எந்த முடிவும் எடுப்பது சரியாக இருக்காது'.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வஞ்சரம் மீன் 1 கிலோ ரூ.1400
தமிழ்நாட்டில் விசை படகுகள் கடலுக்கு செல்லாது என்ற காரணத்தால் மீன் வரத்து படிப்படியாக குறையும். அதேபோல் ஆழ்கடலில் கிடைக்கும் மீன்கள் கிடைக்காது. இதனால் மீன் விலை உயரும். கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்கள் மற்றும் விசாகப்பட்டினத்தில் இருந்து மீன் கொண்டு வரப்படும். பொதுவாக வஞ்சிரம், வவ்வால், காலா, பன்னை, டூனா, டைகர் இறால், புளூ கிராப், மட் கிராப், லாப்ஸ்டர், கனவா, திருக்கை ஆகிய மீன் வகைகள் ஆழ்கடலில் கிடைக்கும் மீன்கள் ஆகும். இவை அனைத்தும் அடுத்த 2 மாதங்களுக்கு பிற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும்.
மீன்பிடி தடை காலத்தில் அதிகபட்சமாக கரூரில் வஞ்சரம் மீன் 1 கிலோ ரூ.1400-க்கும், பாறை ரூ.700-க்கும், விளைமீன் ரூ.700-க்கும், சங்கரா ரூ.450-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை மீன்பிடி தடை காலத்திற்கு முன்பு வஞ்சரம் ரூ.600 முதல் ரூ.700-க்கும், பாறை ரூ.500-க்கும், விளைமீன் ரூ.500-க்கும், சங்கரா ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.