நாகையில், கருவாடு உற்பத்தி பாதிப்பு


நாகையில், கருவாடு உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 22 Dec 2022 12:30 AM IST (Updated: 22 Dec 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் விட்டு விட்டு பெய்யும் மழையால் கருவாடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்

நாகையில் விட்டு விட்டு பெய்யும் மழையால் கருவாடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கருவாடு உற்பத்தி

நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பத்தில் கருவாடு காயவைக்கும் தளங்கள் உள்ளன. இங்கு 100-க்கும் மேற்பட்டோர் கருவாடு உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நெத்திலி, வாளை, கிழங்காமீன், ஓட்டாம்பாறை, பூக்கெண்டை, திருக்கை, வஞ்சிரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களில் கருவாடு உற்பத்தி செய்கின்றனர்.

இங்கு தயாரிக்கப்படும் கருவாடு, திருவாரூர், தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, சேலம், வேலூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

ரூ.1 கோடிக்கு வர்த்தகம்

நாள் ஒன்றுக்கு 500 கிலோ முதல் 5 டன் வரையிலான அளவிற்கு கருவாடு தயாரிக்கப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடிக்கு கருவாடு வர்த்தகம் நடைபெறும். இந்த நிலையில் மாண்டஸ் புயல், தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளிட்டவை காரணமாக நாகையில் அடிக்கடி மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

உற்பத்தியில் சுணக்கம்

இதனால் கருவாடு உற்பத்தியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இடையிடையே அடிக்கும் வெயிலை பயன்படுத்தி கருவாடை காய வைத்து வருகிறார்கள். ஆனாலும் நாகையில் விட்டு, விட்டு மழை பெய்வதால் கருவாடு உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நாகை கீச்சாங்குப்பத்தில் கருவாடு தயாரிக்கும் தொழில் செய்து வரும் முகமது கூறியதாவது:-

எனது சொந்த ஊர் கேரளா மாநிலம் கோழிக்கோடு. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு கருவாடு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறோம். காரல், கத்தலை, பாறை உள்ளிட்ட சில மீன்களை கொண்டு கருவாடு தயாரித்து வருகிறோம்.

வாரத்துக்கு 7 டன் கருவாடு

இங்கு தயாரிக்கும் கருவாடு கேரள மாநிலத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறோம். போதுமான மீன் கிடைக்கும் பட்சத்தில் ஒரு வாரத்துக்கு 7 டன் வரை கருவாடு தயாரிக்கிறோம்.

எங்களிடம் 25 பேர் வேலை செய்து வருகின்றனர். மழைக்காலத்தில் கருவாடு தயாரிக்கும் பணி செய்வதில் கடினம் ஏற்படும். அப்போது ஒருநாள் செய்யக் கூடிய வேலை 3 நாட்கள் செய்ய வேண்டி இருக்கும். இருந்தாலும் வேலை ஆட்கள் வருமானம் இன்றி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பணி கொடுத்து வருகிறோம். வேலை ஆட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.600 முதல் ரூ.1000 வரை கூலி கொடுக்கிறோம்.

நாகை கருவாடுக்கு தனி மவுசு

இங்கு தயாரிக்கப்படும் காரல் கருவாடு ஒரு கிலோ ரூ.50, கத்தலை ரூ.60, பாறை ரூ.70 என விற்பணை செய்யப்படுகிறது. கருவாடு உற்பத்தியில் கேரள மாநிலம் தலச்சேரிக்கு அடுத்த படியாக நாகை உள்ளது. இங்கு தயார் செய்யப்படும் கருவாடுகளுக்கு தனி மவுசு உண்டு. அடைமழை காலங்களில், அன்றாட உணவுத்தேவையில், முக்கியத்துவம் பெற்றிருந்த மா வத்தல், கொத்தவரை வத்தல், சுண்டைக்காய் வத்தல், பாகற்காய் வத்தல் போன்ற வத்தல், வடகம் வரிசையில் அசைவப்பிரியர்களின் முக்கிய உணவாக கருவாடு இருக்கிறது. பச்சை மீன் சந்தையில் விற்பனைக்கு வராத பட்சத்தில், வழக்கத்தைவிட கருவாடு அதிக அளவில் விற்பனையாகும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story