இலங்கை அரசை கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்


இலங்கை அரசை கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
x

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக்கோரி மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி கைது செய்தனர். மேலும் அவர்கள் சென்ற 5 விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து மீனவர்களையும், அவர்கள் சென்ற படகையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், இலங்கை அரசை கண்டித்தும் மீனவ சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

ஆர்ப்பாட்டம்

இதையடுத்து நேற்று ஜெகதாப்பட்டினத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் விசைப்படகு கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் வலைகளை கடற்கரையோரம் குவித்து வைத்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் இலங்கை அரசை கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு இலங்கை அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

இந்த நிலையில், மீன்வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனவே வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டுவிட்டு தொழிலுக்கு செல்லும்படி வலியுறுத்தினர். ஆனால் இந்த விவகாரத்தில் சரியான முடிவு எடுக்கும்வரை தங்களது போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.


Next Story