மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை
நாகையில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை..
நாகையில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை..
வங்கக்கடலில் புயல்
வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது வலுவடைந்து புயலாக மாற உள்ளதாகவும், இதனால் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து மீன்வளத்துறை மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் ஆழ்கடல் சென்ற மீனவர்களை திரும்பி வரவும் அறிவிக்கப்பட்டது. மீன்வளத்துறை மீன்பிடிக்க செல்ல டோக்கன் வழங்கியதை நிறுத்தியது.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது.இதனால் அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம், கல்லார், செருதூர், நாகூர் நம்பியார்நகர், சாமந்தான்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் நேற்று 2-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் 600 விசைப்படகுகளும், 3,500 பைபர் படகுகளும் கரைப்பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.
கடலில் குளித்த சுற்றுலா பயணிகள்
வேளாங்கண்ணியில் கடல் சீற்றமாக இருந்ததை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் கடலில் குளித்தனர். கடல் சீற்றத்தின் போது, ஏதேனும் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு போலீசார் கடற்கரையோரம் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
வேளாங்கண்ணியில் கடல் சீற்றம் குறையும் வரை சுற்றுலா பயணிகளை கடலில் குளிக்க அனுமதிக்க கூடாது. இதுதொடர்பாக ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம்
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை கரையில் இருந்து சற்று தொலைவில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி கிடந்தது