பெட்ரோல் பங்க் அமைப்பதை எதிர்த்து மீனவர்கள் தொடர் போராட்டம்
சின்னமுட்டத்தில் பெட்ரோல் பங்க் அமைப்பதை எதிர்த்து மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சின்னமுட்டத்தில் பெட்ரோல் பங்க் அமைப்பதை எதிர்த்து மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்கள் போராட்டம்
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. இந்தநிலையில் சின்னமுட்டத்தில் புதிதாக பெட்ரோல் பங்க் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கு சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த பகுதியில் புதிதாக பெட்ரோல் நிலையம் அமைத்தால் எதிர்பாராத விதமாக தீ விபத்துகள் நடந்தால் தங்கள் குடியிருப்புகளுக்கும் நாட்டுபடகுகள் மற்றும் விசைப்படகுகளுக்கும் பெரும் பாதிப்பு வரும் என கூறுகிறார்கள். இதனால் பெட்ரோல் பங்க் அமைப்பதை எதிர்த்து கடந்த 9-ந் தேதி முதல் சின்னமுட்டம் புனித தோமையார் ஆலயம் முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லை.
உண்ணாவிரதம்
இந்தநிலையில் புதிய பெட்ரோல் பங்க் அமைக்க கொடுத்த அனுமதியை ரத்து செய்யவில்லை எனில் நாளை (புதன்கிழமை) முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.