கறம்பக்குடியில் மீன் விற்பனை கடும் சரிவு


கறம்பக்குடியில் மீன் விற்பனை கடும் சரிவு
x

கறம்பக்குடியில் மீன் விற்பனை கடுமையாக சரிந்து உள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர்.

புதுக்கோட்டை

மீன் மார்க்கெட்

கறம்பக்குடி வளர்ந்து வரும் வர்த்தக நகரமாகும். இந்த தாலுகாவில் உள்ள 39 ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் அருகே உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் பொருட்கள் வாங்க-விற்க கறம்பக்குடிக்கு வருவது வழக்கம். இங்கு வாரச்சந்தை புதன்கிழமை என்றபோதும் இறைச்சி விற்பனை ஞாயிற்றுக்கிழமைகளில் தான் அதிகம் நடக்கும். குறிப்பாக தஞ்சாவூர் மாவட்ட கடற்கரையை ஒட்டிய பகுதி என்பதால் மீன் விற்பனை அதிகளவில் நடைபெறும்.மீன்பிடி தடைகாலம் முடிந்து கடந்த சில வாரங்களாக தான் மீன் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது. இந்தநிலையில் கறம்பக்குடி மீன் மார்க்கெட்டில் நேற்று கலிங்கா முரள் கிலோ ரூ.500-க்கும், சீலா ரூ.400-க்கும் மடவாகெண்டை ரூ.300-க்கும், சங்கரா ரூ.400-க்கும், இறால் ரூ.400 முதல் ரூ.600 வரைக்கும், மத்தி ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் கறம்பக்குடி மீன் மார்க்கெட் நேற்று மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறியதாவது:-

மீன் விற்பனை சரிவு

கறம்பக்குடி மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 5 ஆயிரம் கிலோ மீன்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் நேற்று 2,500 கிலோ விற்பனை செய்வதே பெரும் சிரமமாகி விட்டது. இதேபோல் ஆடு, கோழி இறைச்சி விற்பனையும் பெரும் சரிவை கண்டுள்ளது. மீன் குழம்பு தயாரிப்புக்கு தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி அவசியம். கடந்த வாரம் கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்ட தக்காளி நேற்று கிலோ ரூ.180-க்கு விற்கப்பட்டது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து உள்ள நிலையில் அதை வாங்க சிரமப்படும் இல்லத்தரசிகள் மீன் உள்ளிட்ட இறைச்சிகளை வாங்குவதை தவிர்த்தனர். இதனால் கறம்பக்குடி பகுதியில் மீன் விற்பனை பெருமளவில் குறைந்து விட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒரு கிலோ மீனுக்கு ¼ கிலோ தக்காளி இலவசம்

தக்காளி விலை உயர்வால் விற்பனை பாதிக்கப்படுவதை அறிந்த சில்லறை வியாபாரிகள் கறம்பக்குடி பகுதியில் இருசக்கர வாகனங்களில் ஒரு கிலோ மீனுக்கு ¼ கிலோ தக்காளி இலவசம் என அறிவித்து விற்பனை செய்தனர். வியாபாரிகளின் இந்த யுக்தி கைகொடுத்தது. பெண்கள் பலரும் இவர்களிடம் மீன்களை ஆர்வமுடன் வாங்கினர். கொள்முதல் செய்த மீன் வீணாவதை தடுக்க லாபம் பார்க்காமல் விற்பனை செய்வதாக அந்த வியாபாரிகள் கூறினர்.


Next Story