தமிழகத்தில் ஜிலேபி மீன்களை தாக்கும் புதிய வைரஸ் - கொத்து கொத்தாக இறக்கும் மீன்கள்


தமிழகத்தில் ஜிலேபி மீன்களை தாக்கும் புதிய வைரஸ் - கொத்து கொத்தாக இறக்கும் மீன்கள்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 21 Oct 2023 12:59 AM IST (Updated: 21 Oct 2023 1:02 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவிலேயே முதன்முறையாக ஜிலேபி மீன்களை தாக்கும் புதிய வைரஸ் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நம்ம ஊர் குளங்களில் காணப்படும் ஜிலேபி கெண்டை மீன்கள் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டவை என்பது எத்தனை பேருக்கு தெரியும்? கடந்த 1950-ம் ஆண்டு இந்திய நீர்நிலைகளில் ஏழைகளின் மீன் என்று கருதப்படும் மொசாம்பிக் திலாபியா மீன் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் 1970-களில் இந்த மீன் வகையில் சற்று பெரியதான நைல் திலாபியா மீன் அறிமுகம் செய்யப்பட்டது.

ஜிலேபி கெண்டை என்று அழைக்கப்படும் இந்த மீன்கள் குளங்களிலும் பண்ணைகளிலும் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. மீன் பண்ணைகளில் வளர்க்கப்படும் ஜிலேபி மீன் ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 70 ஆயிரம் டன் ஜிலேபி மீன்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இவற்றில் 30 ஆயிரம் டன் ஜிலேபி மீன்கள் பண்ணைகளிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டன.

அப்படி இருக்கையில் தற்போது மீன் பண்ணை விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஜிலேபி மீன்களை தாக்கும் புதிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் ராணிப்பேட்டை வாலாஜாவில் உள்ள பண்ணை குளங்களில் வளர்க்கப்படும் ஜிலேபி மீன்கள், திலாபியா பார்வோ என்ற வைரஸ் தாக்கி அதிக அளவில் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. பண்ணைகளில் சுமார் 50 சதவீத மீன்கள் இறந்துள்ளன.

இதற்கு முன்பு இந்த வைரஸ் முதன்முதலில் சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டும், தாய்லாந்தில் கடந்த 2021-ம் ஆண்டும் கண்டறியப்பட்டது. அந்த வரிசையில் தற்போது இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் ஜிலேபி மீன்களை தாக்கும் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீன்களிடையே பரவும் இந்த தொற்று நோயால், குளத்தில் உள்ள நீரும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆராய்ச்சி நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் உள்ள பிற பகுதிகளுக்கும் இந்த வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதை தடுக்க வேண்டியது தற்போது கட்டாயமாகியுள்ளது.


Next Story