ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு முதல் அமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும் - எல்.முருகன்
சென்னையில் படுகொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது;
"பகுஜன் சாமஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமூக சேவையில் ஈடுபட்டு பல இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்சியின் மாநிலத் தலைவருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழ்நாட்டில் நிலவி வருகிறது. இதற்கு முன் அதிமுக நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் தற்போது படுகொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை என்பது அரசாங்கத்தின் தோல்வியை காட்டுகிறது. தி.மு.க. அரசு தோல்வி அடைந்துள்ளது. சட்டம்-ஒழுங்கை கையில் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கெல்லாம் முழு பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாடு அரசு சட்டம் - ஒழுங்கை ஒரு துளி கூட மதிக்கவில்லை. இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்."
இவ்வாறு அவர் கூறினார்.