நடிகர் டி.ராஜேந்தரை சந்தித்து நலம் விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் டி.ராஜேந்தரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை,
திரைப்பட டைரக்டரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு 'திடீர்' உடல் நல குறைவு ஏற்பட்டது. அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
பின்னர் அந்த ஆஸ்பத்திரியில் இருந்து போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். டி.ராஜேந்தர் உடல்நிலையை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரது வயிற்றுக் குள் ரத்த கசிவு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது, நல்ல முறையில் அவர் இருப்பதாக போரூர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், உடல்நலக்குறைவால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் டி.ராஜேந்தரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.