பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் நிவாரணம் அறிவிப்பு


பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
x

கோப்புப்படம் 

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

சிவகாசி,

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி பலியானார். வெடி விபத்து விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஆலங்குளம் பகுதியில் உள்ள வளையப்பட்டி கிராமத்தில் துலுக்கன்குறிச்சியை சேர்ந்த தவிட்டுராஜன் (வயது 48) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலையில் நேற்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். மாலை 3 மணிக்கு பணி முடியும் நேரத்தில் ஒரு அறையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் அந்த அறையில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட திருவேங்கடம் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் (47) என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடன் பணியில் ஈடுபட்டு இருந்த வெம்பக்கோட்டை காமராஜர் நகரை சேர்ந்த புவனேசுவரன் (33) என்பவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர். பலத்த காயம் அடைந்த புவனேசுவரனை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்த ஜெயராமன் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், விபத்தில் உயிரிழந்த ஜெயராமன் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் அறிவித்தார். மேலும், படுகாயம் அடைந்த பவானீஸ்வரனுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


Next Story