ஜேடர்பாளையம் பகுதியில் தொடரும் பரபரப்பு:டிராக்டர், வாழை மற்றும் மரவள்ளி செடிகளுக்கு தீ வைப்புபோலீசார் தீவிர விசாரணை


ஜேடர்பாளையம் பகுதியில் தொடரும் பரபரப்பு:டிராக்டர், வாழை மற்றும் மரவள்ளி செடிகளுக்கு தீ வைப்புபோலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 7 Sept 2023 12:30 AM IST (Updated: 7 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையம் பகுதியல் டிராக்டர், வாழை மற்றும் மரவள்ளி செடிகளுக்கு தீ வைப்பு சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்த வன்முறை சம்பவங்கள்

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே வி.கரபாளையத்தில் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி ஆடு மேய்க்க சென்ற இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வெல்ல ஆலை கொட்டகையில் வேலை செய்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்களின் கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பஸ் போன்றவற்றுக்கு தீ வைக்கப்பட்டன. மேலும் குளத்தில் விஷத்தை கலந்தது என அடுத்தடுத்த வன்முறை சம்பவங்கள் நடந்தன.

இதனை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த அறையை உடைத்த மர்மநபர்கள் தொழிலாளர்கள் மீது மண்எண்ணெய் பாட்டில்களை வீசி தீ வைத்தனர். இதில் ராஜேஷ் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை, பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. இதனால் ஜேடர்பாளையம் பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான போலீசார் இரவு, பகலாக துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

டிராக்டருக்கு தீ வைப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜேடர்பாளையம் வடக்கு தோட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி (42) என்பவரது தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட டிராக்டருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (70) என்பவரது தோட்டத்தில் குறைந்த அளவில் மரவள்ளிக்கிழங்கு செடிகள், அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி (42) என்பவருடைய வாழை மரங்களையும் மர்ம நபர்கள் வெட்டி சாய்த்து சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா தலைமையில் கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அப்பகுதியில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறிது காலத்துக்கு பின்னர் மீண்டும் மரங்கள் வெட்டி சாய்ப்பு, தீ வைப்பு சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story