தனியார் ஆயில் மில்லில் தீவிபத்து: ஆலங்குடியில் பொதுமக்கள் திடீர் மறியல்
ஆலங்குடியில் தனியார் ஆயில் மில்லில் தீவிபத்து ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அப்பகுதி மக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திடீர் தீவிபத்து
ஆலங்குடி நம்பன்பட்டி சாலையில் தனியாருக்கு சொந்தமான ஆயில் மில் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஆயில் மில்லில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி புகைமண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்தநிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தனியார் ஆயில் மில்லால் சுகாதார சீர்கேடு மற்றும் தண்ணீர் மாசு ஏற்படுவதாக கூறி ஆலங்குடி- நம்பன்பட்டி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் உடன்பாடு ஏற்படாததால் பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனைதொடர்ந்து ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த தனியார் மில்லில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் தங்களது பிரச்சினை குறித்து மனுவாக எழுதி தருமாறு கூறினார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் குடங்களில் தண்ணீரை கொண்டு வந்து காண்பித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து பொதுமக்களின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தார். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.