தீ விபத்து-வெள்ள பாதிப்பு மீட்பு ஒத்திகை


தீ விபத்து-வெள்ள பாதிப்பு மீட்பு ஒத்திகை
x

திண்டுக்கல்லில், அரசு மகளிர் கல்லூரியில் தீ விபத்து மற்றும் வெள்ள பாதிப்பு மீட்பு ஒத்திகை நடந்தது.

திண்டுக்கல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கலெக்டர் பூங்கொடி உத்தரவிட்டார். மேலும் தீ விபத்து, வெள்ள பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேறுதல், ஆபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்களுக்கு ஒத்திகை மற்றும் பயிற்சி அளிக்கும்படி அறிவுறுத்தினார்.

அதன்படி திண்டுக்கல் எம்.வி.எம். அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்து மற்றும் வெள்ள பாதிப்பு மீட்பு ஒத்திகை மற்றும் பயிற்சி நடந்தது. இதற்கு தீயணைப்புதுறை மாவட்ட அலுவலர் வெங்கட்ரமணன் தலைமை தாங்கினார். மேலும் உதவி அலுவலர்கள் மயில்ராஜ், சிவக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்பு ஒத்திகை நடத்தினர்.

இதில் கியாஸ், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றால் ஏற்படும் தீயை அணைப்பது, அத்தகைய தீ விபத்துகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தத்ரூபமாக செய்து காண்பித்தனர். மேலும் கியாஸ் சிலிண்டரில் ஏற்படும் தீயை அணைப்பது, தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைத்தல் குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோல் வெள்ளத்தில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்பது, மூச்சுத்திணறல் ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.


Next Story