மலைப்பாதையில் தீ விபத்து: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு...!
சதுரகிரி மலைப்பாதையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். சதுராசலம், சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகைவனம் என்று போற்றப்படும் சதுரகிரி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை,பவுர்ணமி என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் இங்குள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு நவராத்திரி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதேபோல், இந்த ஆண்டு விழா கடந்த 26-ம் தேதி காலை 5 மணிக்கு காப்பு கட்டு வைபவத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் இரவு 6 மணி முதல் 9 மணி வரை அம்மன் கொலு வீற்றிருந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது,
இதனால், சதுரகிரி கோவிலுக்கு வரும் 5-ந் தேதி வரை தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி வழங்கியிருந்தனர். அதனை பயன்படுத்தி தினமும் ஏராளமான பொதுமக்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்துவந்தனர்.
இந்த நிலையில் சதுரகிரி மலைப்பாதையில் சாப்டூர் வனச்சரகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யவந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.