ஈரோட்டில் பிளாஸ்டிக் ஆலையில் தீ விபத்து
ஈரோட்டில் பிளாஸ்டிக் ஆலையில் தீ விபத்து
ஈரோடு அருகே உள்ள நரிப்பள்ளம் பகுதியில் குமரேசன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் ஆலை செயல்பட்டு வருகிறது. அங்கு பிளாஸ்டிக் பொருள்களை உருக்கி மறு சுழற்சிக்கு தயார் செய்து அனுப்பும் பணி நடந்து வருகிறது. நேற்று அந்த ஆலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று மதியம் ஆலையில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் திடீரென தீப்பிடித்தது. இதில் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அங்கிருந்து கரும்புகை வெளிவந்தது. இதன்காரணமாக அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது.
இதைப்பார்த்ததும் அங்கிருந்தவர்கள் உடனடியாக ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அதிகாரி நவீந்திரன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து நாசமானது.