காரிமங்கலம் அருகேபழைய பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
பிளாஸ்டிக் குடோன்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள எச்சனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 47). இவர் காரிமங்கலம்- மொரப்பூர் சாலை தெல்லனஅள்ளியில் பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று அதிகாலை பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீப்பிடித்தது.
பின்னர் சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி குடோன் முழுவதும் எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மின்கசிவு
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீைர பீய்ச்சியடித்து தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த ரூ.1 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.
இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரனையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.