பைனான்சியர் தூக்குப்போட்டு தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்


பைனான்சியர் தூக்குப்போட்டு தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்
x

செய்யாறில் பைனான்சியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

செய்யாறில் பைனான்சியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பைனான்சியர் தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் கொடநகர் அறிஞர் அண்ணா பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு என்கிற மணி (வயது 26), பைனான்சியர். இவரது மனைவி ரூபிணி (25). இவர்களுக்கு ஒரு வயதில் கீர்த்தி என்ற மகன் உள்ளான்.

மாங்கால் கூட்ரோட்டில் திருநாவுக்கரசு தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அதில், செய்யாறு தாலுகா பெருங்களத்தூர் கிராமத்தை சேர்ந்த குபேந்திரன் மகன் அன்பு பங்குதாரராக இருந்தார். அந்த நிறுவனத்தில் இருந்து அன்பு விலகிக் கொண்டதால் அவரது பங்குத்தொகையை கேட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி நிதி நிறுவனத்திற்கு சென்ற அன்பு, அவரது தம்பி நடேசன் மற்றும் அடையாளம் தெரியாத 3 பேர் திருநாவுக்கரசியிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து ரூ.10 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு நிதி நிறுவனத்தையும் பூட்டிவிட்டு சென்றனர்.

மறுநாள் 28-ந்தேதி காலையில் திருநாவுக்கரசிடம், அன்பு, அவரது தம்பி நடேசன் ஆகியோர் பணத்தை கொடுத்துவிட்டு நிதி நிறுவன கடையின் சாவியை வாங்கிக் கொள் என்று கூறியுள்ளனர். மேலும் அவரை மிரட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் திருநாவுக்கரசு வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து செய்யாறு போலீசில் புகார் செய்யப்பட்டது.

சாலை மறியல்

இதற்கிடையில் திருநாவுக்கரசின் தற்கொலைக்கு காரணமான அன்பு, அவரது தம்பி நடேசன் மற்றும் அடையாளம் தெரியாத 3 பேரை கைது செய்யக்கோரி திருநாவுக்கரசின் மனைவி, அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அண்ணா சிலை அருகில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், கோவிந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில், அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story