சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.370 கோடியில் நிதிநுட்ப நகரம், நிதிநுட்ப கோபுரம்


சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.370 கோடியில் நிதிநுட்ப நகரம், நிதிநுட்ப கோபுரம்
x

சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.370 கோடியில் நிதிநுட்ப நகரம் மற்றும் நிதிநுட்ப கோபுரத்தை அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

டைடல் பார்க்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தால் நந்தம்பாக்கத்தில் ரூ.116 கோடி மதிப்பீட்டில் 56 ஏக்கர் நிலப்பரப்பில், நிதிநுட்ப நகரம் (பைன்டெக் சிட்டி) அமைப்பதற்கும், அங்கு முதற்கட்டமாக ரூ.254 கோடி மதிப்பீட்டில் 5.6 லட்சம் சதுர அடி கட்டிட பரப்பளவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் என்ற அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.

தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்படக்கூடிய அதிவேக வளர்ச்சியை கருத்தில் கொண்டு, கடந்த 2000-ம் ஆண்டு சென்னை ராஜீவ்காந்தி சாலையில் கருணாநிதி தொலைநோக்குப் பார்வையோடு 'டைடல் பார்க்' அமைத்தார். இதன் மூலம் அந்த சாலை மட்டுமன்றி, அப்பகுதி முழுவதும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமையப்பெற்று, தற்போது தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடையாளமாக விளங்கி வருகிறது.

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், நிதிநுட்ப துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நிதிநுட்ப துறையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உயரிய நோக்கமாகும்.

நிதிநுட்ப நகரம்

அதை நிறைவேற்றும் வகையில், 2021-2022-ம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவு திட்ட அறிக்கையில், நிதிநுட்பத்துறை வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் மாபெரும் வாய்ப்புகள் உள்ளதால் அதை முன்னெடுக்கும் வகையில் நந்தம்பாக்கத்தில் நிதிநுட்ப நகரம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கு இணங்க, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தால் நந்தம்பாக்கத்தில் ரூ.116 கோடி மதிப்பீட்டில் 56 ஏக்கர் நிலப்பரப்பில் நிதிநுட்ப நகரம் அமைக்கப்பட உள்ளது. இந்த நிதிநுட்ப நகரம், நிதித்துறை சார்ந்த உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கிளைகளை அமைப்பதற்கு ஏதுவாக சாலைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், திடக்கழிவு மேலாண்மை, மழைநீர் வடிகால் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும்.

மேலும், அங்கு பணிபுரிபவர்களுக்கு அந்நகரத்திலேயே குடியிருப்பு வசதி ஏற்படுத்தப்படுவதுடன், வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், பூங்காக்கள் மற்றும் உணவகங்கள் போன்ற அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும். இந்நகரம் அமைவதன் மூலம் ரூ.12 ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

நிதிநுட்ப கோபுரம்

நிதிநுட்ப நகர திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.254 கோடி மதிப்பீட்டில் 5.6 லட்சம் சதுரஅடி கட்டிட பரப்பளவில் சர்வதேச தரத்திலான ஒரு நிதிநுட்ப கோபுரம் என்ற அடுக்குமாடிக் கட்டிடம் கட்டப்பட உள்ளது. நிதி மற்றும் நிதிநுட்ப நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை தொடங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ள அலுவலகங்கள் இங்கு அமைக்கப்படும்.

இதில் 250 இருக்கைகள் மற்றும் 50 இருக்கைகள் கொண்ட கூட்ட அரங்கங்கள், குழந்தைகள் காப்பகம், உடற்பயிற்சி கூடம், உணவகங்கள் போன்றவை அமைக்கப்படும். இந்த நிதிநுட்ப கோபுரம் அமைவதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன் 7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படும்.

பங்கேற்றோர்

இந்த நிகழ்ச்சியில் நிதி, மின்சாரம் மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கருணாநிதி எம்.எல்.ஏ., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஜெயஸ்ரீ முரளிதரன், செயல் இயக்குனர் ஜெயசந்திரபானு ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story