மாற்றுத்திறனாளிகளின் வாரிசுகளுக்கு நிதியுதவி
தென்காசியில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாரிசுகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, மனுக்களை பெற்றார். கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை என்பன உள்ளிட்ட 418 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை பரிசீலனை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதிலளிக்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம், இயற்கை மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிகளின் 26 வாரிசுதாரர்களுக்கு ஈமச்சடங்கிற்கான நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.17 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4 லட்சத்து 42 ஆயிரத்துக்கான காசோலைகளை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கலால் உதவி ஆணையர் ராஜமனோகரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சங்கரநாராயணன், தனித்துணை கலெக்டர் ஷீலா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.