4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி
மயிலாடுதுறை அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவியை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவியை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
4 பேர் பலி
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள தில்லையாடி கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 4 வாலிபர்கள் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அமைச்சர் மெய்யநாதன் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.
ரூ.3 லட்சம்
நிகழ்ச்சிக்கு கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உயிரிழந்த மாணிக்கம், மதன்ராஜ், நிகேஷ், ராகவன் ஆகிய 4 பேர் குடும்பத்தினர் தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலைகளை பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மாவட்ட கலெக்்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜகணேஷ் ஆகியோர் இருந்தனர்.