திருத்தணி, நெல்லையில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி; முதல்-அமைச்சர் அறிவிப்பு


திருத்தணி, நெல்லையில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி; முதல்-அமைச்சர் அறிவிப்பு
x

திருத்தணி, நெல்லையில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள உறவினர் இல்லத்திற்கு சென்ற திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா போளூர், பார்வதி அகரம் கிராமத்தை சேர்ந்த மல்லிகா (வயது 65), ஹேமலதா (16) மற்றும் கோமதி ஆகியோர் நேற்று காலை திருத்தணியில் உள்ள பழைய கல்குவாரி குட்டை நீரில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வட்டம் கீழத்திருவேங்கடநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது வீட்டிற்கு சென்ற சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் (25) மற்றும் அருண்குமார் (23) ஆகியோர் நண்பர்களுடன் நேற்று முன்தினம் மதியம் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்திக்கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

மக்களுக்கு விழிப்புணர்வு

தற்போது கோடை காலமாகையால் பொதுமக்கள் குறிப்பாக சிறுவர், சிறுமிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளங்கள், ஏரிகள், அருவி மற்றும் ஆறுகள் போன்ற நீர்நிலைகளில் குளிக்கச் செல்கின்றனர். அவ்வாறு குளிக்கும்போது எதிர்பாராதவிதமாக தவறி நீரில் மூழ்கி உயிரிழக்கும் துன்ப நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்நிகழ்வுகள் நம் அனைவருக்கும் மிகுந்த மனவேதனையை அளிப்பதோடு பல குடும்பங்களை தீரா துயரிலும் ஆழ்த்தி விடுகின்றன.

இதனை தவிர்க்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளை போதுமான பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டுமென்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள், தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஏற்படுத்த வேண்டும் எனவும், மாவட்ட கலெக்டர்களும் போதிய கவனம் செலுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story