மாவட்டத்தில் 14.35 லட்சம் வாக்காளர்கள்


மாவட்டத்தில் 14.35 லட்சம் வாக்காளர்கள்
x

நாமக்கல் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி 14 லட்சத்து 35 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 24 ஆயிரம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

நாமக்கல்

இறுதி வாக்காளர் பட்டியல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் ஸ்ரேயாசிங் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 260, சேந்தமங்கலம் தொகுதியில் 284, நாமக்கல் தொகுதியில் 289, பரமத்தி வேலூர் தொகுதியில் 254, திருச்செங்கோடு தொகுதியில் 261 மற்றும் குமாரபாளையம் தொகுதியில் 279 என மொத்தம் 1,627 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இறுதி வாக்காளர் பட்டியலின்படி மாவட்டத்தில் 6,95,695 ஆண் வாக்காளர்கள், 7,39,311 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 192 பேர் என மொத்தம் 14,35,198 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண்கள் வாக்காளர்கள் 43,616 பேர் அதிகம்உள்ளனர்.

19,845 பேர் நீக்கம்

9.11.2022 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 30 ஆயிரத்து 953. புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் 24 ஆயிரத்து 90, நீக்கம் செய்யப்பட்டவர்கள் 19,845 பேர். வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட, திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்தவர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் அஞ்சல் அலுவலகம் மூலமாக வழங்கப்படும்.

தற்போது முதல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் வரை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெற உள்ளன. 31.12.2005 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம். மேலும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து கொள்ளாதவர்கள், திருத்தங்கள் செய்ய விரும்புபவர்களும் உரிய விண்ணப்பங்களை உதவி கலெக்டர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்களிலோ அல்லதுநகராட்சி அலுவலகங்களிலோ அளிக்கலாம்.

ஆதார் எண் இணைப்பு

மேலும் www.nvsp.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 77 சதவீத வாக்காளர்கள் படிவம்- 6பி மற்றும் ஓட்டர்ஸ் ஹெல்ப் லைன் செயலியினை பயன்படுத்தி ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்து உள்ளனர். எனவே இதுவரை தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளாதவர்களும் விரைவில் இணைத்து நாமக்கல் மாவட்டம் 100 சதவீத இலக்கினை விரைவில் அடைய ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, உதவி கலெக்டர் மஞ்சுளா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், தனிதாசில்தார் திருமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகள் கலந்துகொண்டனர்.


Next Story