காங்கிரஸ்-பா.ஜனதாவினர் இடையே பயங்கர மோதல்; 4 பேர் காயம்
பா.ஜனதா அலுவலகத்திற்குள் காங்கிரசார் நுழைய முயன்றதால், பா.ஜனதாவினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர்.
நாகர்கோவில்,
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து இளைஞர் காங்கிரசார் நேற்று மாலை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பா.ஜனதா அலுவலகம் முன் திடீரென திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரசார் சிலர் பா.ஜனதா கட்சி அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. அங்கிருந்த பா.ஜனதா நிர்வாகிகள் காங்கிரசாரை கண்டித்தனர்.
பயங்கர மோதல்
இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருமையில் திட்டிக் கொண்ட அவர்கள் திடீரென கைகலப்பில் ஈடுபட்டு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்க தொடங்கினர்.
கட்சி கொடி கட்டப்பட்டிருந்த தடியால் காங்கிரசார், பா.ஜனதாவினரை தாக்க, பதிலுக்கு அவர்கள் அவர்களிடம் இருந்த தடிகளை பிடுங்கி காங்கிரசார் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இந்த களேபரத்துக்கு இடையே பா.ஜனதா அலுவலகத்தின் மீதும், அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் காங்கிரசார் கற்களை வீசினர். இது பா.ஜனதாவினருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பதிலுக்கு அவர்களும் கற்களை வீசி தாக்கினர்.
4 பேர் காயம்
இந்த பயங்கர மோதலில் பா.ஜனதாவை சேர்ந்த கிருஷ்ணன், ஜெகநாதன் ஆகிய 2 பேரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டைசன், லாரன்ஸ் ஆகிய 2 பேரும் காயமடைந்தனர்.