உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவையொட்டி குட்டைத்திடலில் வாண வேடிக்கை


உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவையொட்டி குட்டைத்திடலில் வாண வேடிக்கை
x

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவையொட்டி குட்டைத்திடலில் நடந்த வாண வேடிக்கை நிகழ்ச்சியை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர்.

திருப்பூர்

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவையொட்டி குட்டைத்திடலில் நடந்த வாண வேடிக்கை நிகழ்ச்சியை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர்.

தேர்த்திருவிழா

உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி நோன்பு சாட்டப்பட்டு, கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 13-ந் தேதி மாலை தேரோட்டம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேரை திரளான பக்தர்கள் கண்டுரசித்தனர்.

பரிவேட்டை

தேரோட்டம் நிறைவு பெற்ற நிலையில் 14-ந் தேதி காலை கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு நடைபெற்ற பரிவேட்டை நிகழ்ச்சியில் மாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக குட்டை திடல் வந்தடைந்தார்.

மேலும் சிம்ம வாகனத்தில் அம்மன் காட்சி தந்தார். பின்னர் இரவு 10.30 மணியளவில் குட்டை திடலில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

வாண வேடிக்கை

கண்ணைக் கவரும் பல வண்ணங்களில் வானத்தில் வர்ண ஜாலம் நிகழ்த்திய வாண வேடிக்கையை குட்டை திடலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர். அத்துடன் சுற்றுப்பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளின் மொட்டைமாடி, வர்த்தக நிறுவனங்களின் மேல் தளம் ஆகியவற்றில் நின்று ரசித்தனர். மேலும் தொடர்ச்சியாக வெடித்த வெடிச்சத்தம் அதிர வைத்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாக ரசித்த இந்த நிகழ்ச்சி நள்ளிரவு வரை நீடித்தது.

இதனால் தளி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று காலை 10.30 மணியளவில் கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 11.30 மணியளவில் மகாபிஷேகம், மதியம் 12.30 மணியளவில் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தேர்த்திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நேற்று இரவு 7 மணியளவில் அம்மன் புஷ்ப பல்லக்கு வாகனத்தில் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.


Related Tags :
Next Story