அரசு நிர்ணயித்த விலையில் உரங்களை விற்பனை செய்ய வேண்டும்
அரசு நிர்ணயித்த விலையில் உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர நிறுவன நிலையங்களில் யூரியா 3 ஆயிரத்து 75 மெட்ரிக் டன், டி.ஏ.பி. ஆயிரத்து 497 மெட்ரிக் டன், பொட்டாஷ் ஆயிரத்து 375 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 836 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 5 ஆயிரத்து 270 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நடப்பு பருவத்திற்கு தேவையான உரங்கள், ஸ்பிக் நிறுவனத்தின் மூலம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 537 மெட்ரிக் டன் யூரியா, 300 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 12 மெட்ரிக் டன் அம்மோனியம் குளோரைடு மற்றும் நேற்று முன்தினம் எம்.எப்.எல். யூரியா 922 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 229 மெட்ரிக் டன் உரம் ஆகியவை சரக்கு ரெயில் மூலம் சின்னசேலம் வந்தடைந்தது. இந்த உரங்களை நானும், வேளாண்மை உதவி இயக்குனர்
(தரக்கட்டுப்பாடு) அன்பழகன் ஆகியோர் ஆய்வு செய்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம்.
சாம்பல் சத்து
விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரைப்படி பயிர்களுக்கு தேவையான உரங்களை் விற்பனை முனைய கருவி மூலம் வாங்கி ரசீது பெற்று பயனடையலாம். விவசாயிகள் பயிர்களுக்கு தழைச்சத்து கொண்ட யூரியாவை மட்டும் பயன்படுத்தாமல் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட காம்ப்ளஸ் உரங்களையும் பயன்படுத்த வேண்டும். மேலும் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் அரசு நிர்ணயித்த விலையில் மட்டும் உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் விவசாயிகளுக்கு அதிகாரிகள், வியாபாரிகள் வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.