உரங்களை கூட்டுறவுத்துறை மூலம் வழங்க வேண்டும்; விவசாயிகள் வலியுறுத்தல்


உரங்களை கூட்டுறவுத்துறை மூலம் வழங்க வேண்டும்; விவசாயிகள் வலியுறுத்தல்
x

வேளாண்துறை மூலம் வழங்கும் உரங்களை கூட்டுறவுத்துறை மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கீழ்பென்னாத்தூரில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவண்ணாமலை

வேளாண்துறை மூலம் வழங்கும் உரங்களை கூட்டுறவுத்துறை மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கீழ்பென்னாத்தூரில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் பிரிவு) குமரன் தலைமையில் நடந்தது.

தாசில்தார் சாப்ஜான், வட்டார வேளாண் உதவி இயக்குனர் சந்திரன், தோட்டக்கலை உதவி இயக்குனர் அமுல் சேவியர் பிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி, வட்ட வழங்கல் அலுவலர் மஞ்சுநாதன், வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் துணை அலுவலர் சுப்பிரமணி வரவேற்றார்.

இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் பழனிசாமி, சதாசிவம், மணிகண்டன், அட்மா ஆலோசனைக்குழு தலைவர் சிவகுமார், இயற்கை விவசாயி கிருஷ்ணன் உள்பட விவசாயிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

அகரம் கிராமத்தில் பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு வருவாய்த்துறை மூலம் இதுவரை பட்டா வழங்கவில்லை. இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேளாண் துறை மூலம்...

வைப்பூர் தொடங்கி அகரம், நாரையூர் வரையிலான நீர்வழி பாதையில் (பஞ்சாயத்து ஏரி) உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒப்பந்த முறையில் நெல் எடை போடுவதற்கு நியமிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் விவசாயிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு எடை போடுகின்றனர்.

கரும்பு வெட்டும் காலம் தொடங்கி விட்டதால் சாலைகளில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆத்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளை சுற்றுலா அழைத்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிதாக காய்ச்சல் பரவி வருவதால் சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்ட வழங்கல் துறை மூலம் கைரேகை செயல்படாத நிலையில் மாற்று வழிமுறை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்லங்குப்பம் புதிய காலனியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்துள்ளதை உடனடியாக சரி செய்ய வேண்டும். வேளாண் துறை மூலம் வழங்கும் உரங்களை கூட்டுறவு துறை மூலமாக விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கோரிக்கை வைத்து பேசினர்.

அதைத் தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதில் அளித்தனர்.


Next Story