நாய்கள் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி-திருநங்கை படுகாயம்


தினத்தந்தி 3 Oct 2023 12:15 AM IST (Updated: 3 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே நாய்கள் சண்டைபோட்டுக்கொண்டு சாலையின் குறுக்கே உருண்டவாறு வந்து ேமாதியதில் ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானார். திருநங்கை உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆட்டோ

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கல்லேரிப்பட்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் மணி. ஆட்டோ டிரைவர். இவர் தினமும் காலை ஆட்டோவை ஆரணிக்கு சவாரிக்காக எடுத்துச்செல்லும்போது அதே கிராமத்தைச் சேர்ந்த பிச்சாண்டி என்பவரின் மனைவி இந்திரா (வயது 48) இவரது ஆட்டோவில் செல்வது வழக்கம்.

இந்திரா ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள அரிசி ஆலையில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று மணியின் ஆட்டோவில் அவர் வழக்கம்போல் சென்று கொண்டிருந்தார்.

ஆரணி -சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவர் எலும்பு முறிவுக்காக நாட்டு வைத்தியரிடம் கட்டுப்போடுவதற்காக இவரது ஆட்டோவில் மனைவி அசினாவுடன் (37) ஏறினார். மேலும் திருநங்கையான காயத்ரியும் பயணம் செய்தார்.

நாய்கள் மோதல்

ஆட்டோ ஆரணி சேமிப்பு கிடங்கு அருகே வந்தபோது சாலையில் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் சண்டை போட்டுக்கொண்டு உருண்டவாறு இவரது ஆட்டோவில் வந்து மோதின.

இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரிசி ஆலை தொழிலாளி இந்திரா சம்பவ இடத்திலேயே இறந்தார். அசினா, காயத்ரி, டிரைவர் மணி ஆகிய மூவரும் பலத்த காயம் அடைந்தனர். அசினாவின் கணவர் அப்துல் ரஹீம் காயமின்றி உயிர் தப்பினார்.

மருத்துவமனையில் சேர்ப்பு

படுகாயம் அடைந்த 3 பேரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து இந்திராவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் இந்திராவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆரணி நகரின் பல்வேறு இடங்களில் நாய்கள் கூட்டமாக படையெடுத்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. எனவே நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.



Next Story