மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி


மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி
x

மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெரம்பலூர்

பிளஸ்-2 தேர்வு முடிவில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் மாணவர்களை விட, மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவர்களை விட, மாணவிகள் 1.67 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரியலூர் மாவட்டத்திலும் மாணவர்களை விட, மாணவிகள் 2.51 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

100 சதவீதம் தேர்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்படும் சூப்பர்-30 என்ற சிறப்பு வகுப்பில் பயின்ற 107 மாணவ-மாணவிகளில், அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 54 பேர் 500-க்கு மேல் மதிப்பெண்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றுத்திறனாளிகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளிகளில் கண் பார்வை குறைபாடுடையவர்கள் 8 பேரும், காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் 8 பேரும், இதர வகை மாற்றுத்திறனாளிகள் 19 பேரும் தேர்ச்சி பெற்றனர். உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் 11 பேர் தேர்வு எழுதியதில், 10 பேர் தேர்ச்சி பெற்றனர்.

பெரம்பலூரில் 195 பேர் 100-க்கு 100 மதிப்பெண்

பெரம்பலூர் மாவட்டத்தில் இயற்பியல் பாடத்தில் 8 பேரும், வேதியியல் பாடத்தில் 63 பேரும், உயிரியியல் பாடத்தில் 31 பேரும், கணித பாடத்தில் 7 பேரும், வணிகவியல் பாடத்தில் 11 பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 14 பேரும், பொருளாதாரம் பாடத்தில் 5 பேரும், வரலாறு பாடத்தில் 6 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 27 பேரும், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 13 பேரும், வணிக கணிதம் பாடத்தில் 8 பேரும், விவசாய கோட்பாடு பாடத்தில் 2 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 79 பேர் மட்டுமே பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றிருந்திருந்த நிலையில், இந்த ஆண்டு 195 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதம்

பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் அரசு பள்ளிகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் 95.90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 2-வது இடமும், அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 95.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று 6-வது இடமும் பிடித்தது.


Next Story