கார் மோதி அரசு பெண் ஊழியர் பலி


கார் மோதி அரசு பெண் ஊழியர் பலி
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் நாற்கரசாலையை கடக்க முயன்றபோது, கணவரின் கண் எதிரே கார் மோதி அரசு பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் நாற்கரசாலையை கடக்க முயன்றபோது, கணவரின் கண் எதிரே கார் மோதி அரசு பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

அரசு பெண் ஊழியர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மீனாட்சிநகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 38). இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மனைவி கிருஷ்ணபிரியா (34). இவர் மதுரை சிப்காட் அலுவலகத்தில் முதுநிலை உதவியாளராக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு லயவர்த்தனா (6) என்ற மகள் உள்ளார்.

நாற்கரசாலையை கடக்க முயன்றபோது...

கிருஷ்ணபிரியா தினமும் கோவில்பட்டியில் இருந்து மதுரைக்கு பஸ்சில் வேலைக்கு சென்று வந்தார். அவர் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு, இரவில் மதுரையில் இருந்து கோவில்பட்டிக்கு பஸ்சில் வந்தார்.

அவர் வந்த பஸ் இரவு 8.30 மணியளவில் கோவில்பட்டி பைபாஸ் ரோட்டில் கூடுதல் பஸ் நிலையம் முன்புள்ள துணை மின்நிலையம் அருகில் பயணிகளை இறக்கி விட்டு சென்றது.

கிருஷ்ணபிரியாவை அழைத்து செல்வதற்காக, அவரது கணவர் விவேகானந்தன் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் முன்பாக காத்திருந்தார். இதனால் கிருஷ்ணபிரியா கூடுதல் பஸ் நிலையம் செல்வதற்காக நாற்கரசாலையை கடக்க முயன்றார்.

கார் மோதியது

அப்போது மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற கார் எதிர்பாராதவிதமாக கிருஷ்ணபிரியா மீது பயங்கரமாக மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். தனது கண் எதிரே மனைவி விபத்தில் சிக்கி துடிதுடித்து இறந்ததைப் பார்த்த விவேகானந்தன் கதறி அழுதார்.

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்- இன்ஸ்பெக்டர் ஹரி கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த கிருஷ்ணபிரியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவர் கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த நாகர்கோவில் அன்னை தெரசா நகரைச் சேர்ந்த டிரைவர் அருள்சாமி மகன் சாப்ராஜை (29) கைது செய்தனர்.

கோவில்பட்டி பைபாஸ் ரோட்டில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் பஸ் நிலையத்துக்குள் எந்த பஸ்களும் வந்து செல்வதில்லை. அந்த பஸ் நிலையத்தின் முன்பாக சர்வீஸ் ரோட்டிலேயே நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. மதுரையில் இருந்து நெல்லை செல்லும் சில பஸ்கள், கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் முன்புள்ள சர்வீஸ் ரோட்டுக்கும் வராமல், கிழக்குப்புற சர்வீஸ் ரோட்டிலேயே துணைமின் நிலையம் அருகில் நின்று பயணிகளை இறக்கி செல்கின்றன. அங்கு மின்விளக்குகளும் இல்லாததால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் நாற்கரசாலையை கடக்க முயலும்போது பயணிகள் விபத்தில் உயிரிழக்கின்றனர்.

எனவே, அனைத்து பஸ்களும் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.


Related Tags :
Next Story