புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் கைவினை பொருட்கள் இடம்பெறுகிறது


புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் கைவினை பொருட்கள் இடம்பெறுகிறது
x

புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் கைவினை பொருட்கள் இடம்பெறுகிறது

தஞ்சாவூர்

சென்னையில் நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கும் கண்காட்சியில் புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் கைவினை பொருட்கள் இடம்பெறுகிறது.

புவிசார் குறியீடு

தனித்துவம் வாய்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 40-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இவற்றில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் சிறப்பை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், அவற்றை சந்தைப்படுத்தவும் தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கண்காட்சி

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற 10 கைவினை பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை சென்னை அண்ணாநகர் வி.ஆர்.மாலில் நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 21-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

இது தொடர்பாக தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நமது தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டுமல்ல பல்வேறு கலைகளுக்கு வாழ்விடமாகவும், பிறப்பிடமாகவும் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் மட்டும் 10 கைவினை பொருட்கள் இருக்கின்றன.

10 கைவினை பொருட்கள் இடம்பெறுகிறது

பிரசித்தி பெற்ற தஞ்சை தலையாட்டி பொம்மைகள், தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் ஓவியம், திருபுவனம் பட்டு, கருப்பூர் கலம்காரி ஓவியங்கள், நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம், தஞ்சாவூர் கலைத்தட்டுக்கள், தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடுகள், சுவாமிமலை ஐம்பொன் சிலைகள், நாச்சியார்கோவில் குத்துவிளக்குகள் என 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ளன.

இந்த கலைகளையும், கைவினை கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில் உலகம் முழுவதும் அவர்களை அறிய வேண்டும் என்பதற்காக சென்னையில் 3 நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் இவை இடம்பெறுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story