200 ஆண்டுகாலமாக நடந்து வருகிறது:கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டை காண வந்தவர்களுக்கு கிராம மக்கள் விருந்து
கடந்த 200 ஆண்டுகாலமாக கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டை காண வந்தவர்களுக்கு வீடுகள் தோறும் விருந்து வைத்தனர்.
கடந்த 200 ஆண்டுகாலமாக கண்டுப்பட்டி மஞ்சுவிரட்டை காண வந்தவர்களுக்கு வீடுகள் தோறும் விருந்து வைத்தனர்.
விருந்து உபசாரம்
சிவகங்கை அருகே உள்ள கண்டுப்பட்டி கிராமத்தில் உள்ள பழைய அந்தோணியார் கோவில் திருவிழா ஆண்டுதோறும் தை மாதம் 5-ந் தேதி நடப்பது வழக்கம். இந்த திருவிழாவின் போது ஆலயத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள் என அனைத்து மத மக்களும் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். இன்னும் சிலர் கரும்பு தொட்டில் எடுத்து, மெழுகுவர்த்தி ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். மேலும் திருவிழாவையொட்டி அங்குள்ள திடலில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருவது வழக்கம். இவ்வாறு வருபவர்கள் மதிய வேளையில் வெறும் வயிற்றோடு வீடு திரும்பக்கூடாது என்ற எண்ணத்தில் கண்டுப்பட்டி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் விருந்து உபசாரம் நிகழ்ச்சி நடந்்து வருகிறது.
200 ஆண்டுகாலமாக நடந்து வருகிறது:
விழாவிற்கு வரும் அனைத்து தரப்பு மக்களையும் கிராம மக்கள் அன்போடு அவர்களின் கையை பிடித்து தங்கள் வீட்டில் நடக்கும் விருந்தில் கலந்துகொண்டு பசியாறி செல்லுங்கள் என அழைத்து அவர்களை வீட்டில் நடக்கும் விருந்தில் சாப்பிட வைத்து அனுப்பி வைக்கின்றனர். இவ்வாறு கடந்த 200 ஆண்டுகாலமாக இக்கிராமத்தில் விருந்து உபசாரம் நிகழ்ச்சி நடக்கிறது.
மேலும் இந்த விருந்து சைவ விருந்தாகவும், பாயசத்துடன் கூடிய அறுசுவை கூட்டு கொண்ட விருந்தாகவும் வைத்து கிராம மக்கள் உபசரித்து வருகின்றனர். இதுகுறித்து அக்கிராமத்தை சேர்ந்த வள்ளி என்ற மூதாட்டி கூறியதாவது:- எனக்கு தற்போது 74 வயதாகிறது. எனது முன்னோர்கள் காலத்தில் இருந்தே இந்த விருந்து உபசாரம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. எங்கள் கிராமத்திற்கு வரும் மக்கள் அனைவரும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை பார்த்த பின்னர் அவர்கள் பட்டினியோடு திரும்ப கூடாது என்பதற்காக இந்த விருந்து நடந்து வருகிறது. இவ்வாறு வரும் மக்கள் வீடுகள் தோறும் நடக்கும் விருந்தில் கலந்துகொண்டு சாப்பிட்டு விட்டு மனதார வாழ்த்தி விட்டு செல்வது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தரும் வகையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.