தேவர்சோலை அருகே காட்டு யானைகளால் அச்சம்; பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு வாகன வசதி செய்த வனத்துறையினர்
தேவர்சோலை அருகே காட்டு யானைகள் நடமாட்டத்தால் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக ஆதிவாசி மக்கள் அச்சம் தெரிவித்த நிலையில் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு வனத்துறையினர் வாகன வசதி செய்துள்ளனர்.
கூடலூர்
தேவர்சோலை அருகே காட்டு யானைகள் நடமாட்டத்தால் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக ஆதிவாசி மக்கள் அச்சம் தெரிவித்த நிலையில் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு வனத்துறையினர் வாகன வசதி செய்துள்ளனர்.
காட்டு யானைகள் அச்சுறுத்தல்
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட செம்பக்கொல்லி ஆதிவாசி கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்த நிலையில் வனப்பகுதி என்பதால் காட்டு யானைகள் நடமாட்டம் மற்றும் அச்சுறுத்தல்கள் தினமும் இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கள் கிராமத்துக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
காட்டு யானைகள் தினம் ஊருக்குள் வருவதால் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது என ஆதிவாசி மக்கள் அச்சமடைந்தனர். இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கூடலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் முறையீட்டனர். இதைத் தொடர்ந்து ஆர்டிஓ தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஆதிவாசி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வாகன வசதி
அப்போது பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு வனத்துறை சார்பில் காலை மற்றும் மாலை நேரத்தில் வாகன வசதி செய்து தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. மேலும் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதை ஆதிவாசி மக்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது, இதனால் செம்பக்கொல்லி ஆதிவாசி கிராமத்தில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு நேற்று புறப்பட்டனர். அப்போது உறுதி அளித்தபடி கூடலூர் வன சரகர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் ஆதிவாசி குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு சென்று வீடு திரும்பும் வகையில் வாகன வசதி ஏற்பாடு செய்தனர்.
இதைத் தொடர்ந்து ஆதிவாசி குழந்தைகள் தங்கள் கிராமத்திலிருந்து வனத்துறையினர் வாகனத்தில் ஏறி அமர்ந்தனர். தொடர்ந்து ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அவர்கள் அழைத்து வரப்பட்டனர். இதேபோல் பள்ளிக்கூடம் முடிந்து மாலையில் மீண்டும் ஆதிவாசி குழந்தைகள் வாகனத்தில் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் ஆதிவாசி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
காலை, மாலை நேரத்தில் இயக்கப்படும்
இது குறித்து வன சரகர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, பள்ளிக்கூடம் செயல்படும் நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் வனத்துறை சார்பில் ஆதிவாசி குழந்தைகள் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிவித்தார்.