சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் அச்சம்
சோலையாறு அணை அருகே சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்க நகராட்சிக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வால்பாறை
சோலையாறு அணை அருகே சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்க நகராட்சிக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சாலைகளில் கால்நடைகள்
வால்பாறை பகுதியில் உள்ள சாலைகளில் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித்திரிந்து வருகின்றன. அவை சில நேரங்களில் நடுரோட்டில் படுத்து ஓய்வெடுக்கின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக சோலையாறு அணைக்கு செல்லும் சாலையில் இந்த பிரச்சினை அதிகளவில் காணப்படுகிறது. இதைத்தொடர்ந்து வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் சாலைகளில் கால்நகைடளை சுற்றித்திரிய விடக்கூடாது என்று கால்நடை வளர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கால்நடை வளர்ப்பவர்கள் தங்களது கால்நடைகளை பட்டிகளில் அடைத்து வைத்து வளர்க்காமல், சாலையில் சுற்றித்திரிய விடுகின்றனர்.
அச்சம்
இங்கு கடந்த ஆண்டு சாலையின் குறுக்கே மாடு வந்ததால், இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார். சென்னையில் கடந்த மாதம் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவியை மாடு முட்டியது. இதுபோன்ற சம்பவங்களால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர்.
கடும் நடவடிக்கை
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- வால்பாறையில் சோலையாறு அணைக்கு செல்லும் சாலையில் கால்நடைகள் அதிகளவில் நிற்பதோடு, அவ்வப்போது படுத்துக்கொள்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ேமலும் நடந்து செல்லும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளை கால்நடைகளுக்கு பயந்து தூக்கி கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே சாலைகளில் கால்நடைகள் நடமாடுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.