பிள்ளைகளின் கடிதங்களால் மனம் மாறி குடிப்பழக்கத்தை கைவிட்ட தந்தைகள்
பிள்ளைகளின் கடிதங்களால் மனம் மாறி குடிப்பழக்கத்தை தந்தைகள் கைவிட்டனர்.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் மாணவ, மாணவிகளே பெரும்பாலும் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒரே நேரத்தில் தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு கடிதம் எழுதினர். அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.
அதில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோரிடம் உள்ள தீய பழக்க, வழக்கங்களை சுட்டிக்காட்டி, அவற்றால் தாங்கள் எவ்வளவு மன வேதனை அடைந்திருக்கிறோம் என்பதை விவரித்து, உடனடியாக தீய பழக்க, வழக்கங்களில் இருந்து விடுபட வேண்டும் என்று அந்த கடிதத்தின் மூலம் தங்கள் மனநிலையை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த கடிதத்தை படித்த பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் எவ்வளவு மன வேதனையோடு உள்ளனர் என்பதை புரிந்து கொண்டனர்.
இதில் சிலர் உடனடியாக பள்ளிக்கு வந்து, தாங்கள் பல ஆண்டுகாலம் விடாமல் இருந்த குடிப்பழக்கத்தை உடனடியாக கைவிடுவதாகவும், சிலர் தாங்கள் பயன்படுத்தி வந்த புகையிலை பயன்படுத்துதல் உள்ளிட்ட பழக்கங்களை கைவிடுவதாகவும் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கூறினர். இருப்பினும் அவர்கள் குடிப்பழக்கம், புகையிலை பழக்கத்தை கைவிட்டு இருக்கிறார்களா? என்பதை பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும், சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இதில் கடந்த 2 மாதங்களாக 7 மாணவ, மாணவிகளின் தந்தைகள் குடிப்பழக்கத்திற்கும், புகையிலை பொருட்களுக்கும் அடிமையாகி இருந்ததும், தற்போது அதில் இருந்து விடுபட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்தின் சார்பில், தீய பழக்கங்களை கைவிட்ட 7 மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று நடந்த குடியரசு தின விழாவில் கவுரவிக்கப்பட்டனர். முன்னதாக அவர்களை மாணவ, மாணவிகள் கரவொலி எழுப்பி வரவேற்றனர். தீய பழக்கங்களில் ஈடுபட்டு இருப்போர், அதை விடுத்து நற்செயல்களில் ஈடுபட இந்த நிகழ்ச்சி ஒரு முன் உதாரணமாக அமைந்திருந்தது.