'நீட்' தேர்வு எழுதிய தந்தை-மகன்


நீட் தேர்வு எழுதிய தந்தை-மகன்
x

‘நீட்’ தேர்வு எழுதிய தந்தை-மகன்

திருவாரூர்

திருவாரூரில் 'நீட்' தேர்வை தந்தையும், மகனும் எழுதினர்.

'நீட்' தேர்வு

2022-23-ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வான 'நீட்' தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. இந்த தேர்வை நாடு முழுவதிலும் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் எழுதுவதற்காக விண்ணப்பித்து இருந்தனர்.

கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த தேர்வு நடந்து முடிந்தது. இந்த தேர்வின்போது தேர்வு நடந்த மையங்களில் பல்வேறு வித்தியாசமான காட்சிகள் அரங்கேறியதை பார்க்க முடிந்தது. அந்த வகையில் திருவாரூரில் தந்தையும், மகனும் நீட் தேர்வை எழுதியதை பார்க்க முடிந்தது. இது பற்றிய விவரம் வருமாறு:-

தந்தை-மகன்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேளூர் மேலத்தெருவை சேர்ந்தவர் காத்தையன்(வயது 50). இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். காத்தையன், கடந்த 1992-ம் ஆண்டு கோட்டூர் அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்துள்ளார். பெயிண்டரான இவர், கோவில்களில் சாமி உருவங்களை வரைவார்.

இவருடைய மகன் குமரன், பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று திருவாரூர் வேலுடையார் பள்ளியில் நடந்த நீட் தேர்வை தந்தை, மகன் ஆகிய இருவரும் எழுதினர்.

டாக்டராவதே குறிக்கோள்

இதுகுறித்து காத்தையன் கூறுகையில், டாக்டராக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இதற்காக கணிதம், அறிவியல் சம்பந்தமான பாடப்புத்தகங்களை படித்து வந்தேன்.

தற்போது நீட் தேர்வு எழுத வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதால் இந்த தேர்வினை எழுத முடிவெடுத்தேன். எனது மகனும் டாக்டராக வேண்டும் என்பது எனது குறிக்கோள். இதனால் இருவரும் நீட் தேர்வு எழுத வந்தோம்.

நானும், எனது மகனும் எந்தவித பயிற்சி மையத்திற்கும் செல்லவில்லை. வீட்டிலேயே இருந்து சேர்ந்து படித்து தேர்வுக்கு தயாரானோம்.

நம்பிக்கை உள்ளது

எனக்கு தற்போது 50 வயது ஆகிறது. மருத்துவ படிப்பு 5 ஆண்டுகள் படித்தாலும், மீதம் உள்ள 5 ஆண்டுகள் மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பதே எனது இலக்கு, கனவு, ஆசை. அது நிச்சயம் நிறைவேறும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

காத்தையனுக்கு உள்ள நம்பிக்கையை பார்த்து தேர்வு மையத்துக்கு வந்திருந்தவர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.


Next Story