6 குழந்தைகளின் தந்தை கடலில் தவறி விழுந்து சாவு


6 குழந்தைகளின் தந்தை கடலில் தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 10 Oct 2023 6:45 PM GMT (Updated: 10 Oct 2023 6:46 PM GMT)

குளச்சல் அருகே வள்ளத்தில் மீன் பிடிக்க சென்ற போது 6 குழந்தைகளின் தந்தை கடலில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சல் அருகே வள்ளத்தில் மீன் பிடிக்க சென்ற போது 6 குழந்தைகளின் தந்தை கடலில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

மீன் பிடிக்க சென்றார்

குளச்சல் அருகே உள்ள கோடிமுனை 2-வது அன்பியத்தை சேர்ந்தவர் சகாயராஜ் (வயது 58), மீனவர். இவர் சொந்தமாக வள்ளம் வைத்து மீன்பிடித்தொழில் செய்து வந்தார். இவருக்கு மேரி் ஹெஜலட் என்ற மனைவியும் 5 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 5 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சகாயராஜ் தனது வள்ளத்தில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். சில மணிநேரம் கழித்து அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த சக மீனவர்கள் சகாயராஜ் வள்ளத்தை பார்த்தனர். அப்போது அதில் அவர் இல்லை. அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போனை எடுக்கவில்லை.

தவறி விழுந்து சாவு

இதனால் பதற்றமடைந்த சக மீனவர்கள் சகாயராஜ் நிறுத்தி வைத்திருந்த வள்ளம் அருகே சென்றனர். அப்போது அதில் அவருடைய செல்போன் மற்றும் கடலில் பிடிக்கப்பட்ட கணவாய் மீன்கள் மட்டுமே இருந்தன. உடனே அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அவரை தேடி பார்த்த போது வள்ளத்தின் அருகே கடலில் சகாயராஜ் இறந்து கிடந்தார்.

எனவே சகாயராஜ் மீன் பிடித்து கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரிகிறது. உடனே சக மீனவர்கள் சகாயராஜ் உடலை மீட்டு நேற்று கரைக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story