கூடுவாஞ்சேரியில் 2½ கிலோ கஞ்சாவுடன் தந்தை-மகன் கைது
கூடுவாஞ்சேரியில் 2½ கிலோ கஞ்சாவுடன் சுற்றுத்திரிந்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா பொட்டலங்களுடன்...
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா பொட்டலங்களுடன் 2 பேர் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கூடுவாஞ்சேரி ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது இந்தி மொழியில் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர்.
உடனே இருவரையும் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
2½ கிலோ கஞ்சா பிடிபட்டது
மேலும் அவர்கள் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 2½ கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த ஹயாத் அலிஷேக் (வயது 52) மற்றும் அவரது மகன் ஏக்நாத் அலிஷேக் (27) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 2 பேரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி ஜி.எஸ்.டி. சாலை சாலை ஓரம் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலம் விற்பனை செய்த சென்னை ஒட்டேரி அலெக்சாண்டர் தெருவை சேர்ந்த சையத் அஜித்துல்லா (26), சென்னை பெரியமேடு பகுதியை சேர்ந்த பரத் (32) ஆகிய 2 பேரை மறைமலைநகர் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1கிலோ 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.