மண்வெட்டியால் தாக்கி டிரைவரை கொன்ற மகன்
ஊத்துக்குளி அருகே குடிபோதையில் தகராறு செய்த டிரைவரை அவருடைய மகன் மண்வெட்டியால் அடித்துகொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தகராறு
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் கருமஞ்சிறை சின்னசெங்கப்பள்ளியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது51). தனியார் பள்ளியில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இவருடைய மகன் விஷால் (19). தர்மராஜ் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து குடும்பத்தில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தர்மராஜ் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு சொந்தமான கார் ஒன்று இருந்துள்ளது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் தோட்டத்து வீட்டில் தர்மராஜ் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருடைய மகன் விஷால் அங்கு வந்தார். அப்போது தர்மராஜ் தனது மகனிடம் " காரின் பெயரை ஏன் உன்னுடைய பெயருக்கு மாற்றினாய் என்றும், அப்படி என்றால் நீ உழைக்கும் பணத்தை என்ன செய்தாய்?" என்று கேட்டுள்ளார். இதனால் தந்தை-மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கொலை
இதனால் ஆத்திரம் அடைந்த விஷால் தனது உறவினர் சதிஷ்குமார் (26)என்பவருடன் சேர்ந்து மண்வெட்டியால் தர்மராஜின் தலையில் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இதனால் தர்மராஜ் மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் தர்மராஜின் தங்கை தனலட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் அங்கு வந்து பார்த்தார். அப்போது தலையில் படுகாயம் அடைந்து கிடந்த தர்மராஜை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று தர்மராஜ் உயிரிழந்தார்.
இது தொடர்பாக தனலட்சுமி அளித்த புகாரின் பேரில் குன்னத்தூர் போலீசார் கொலை வழக்கு பதிவு ெசய்து விஷால் மற்றும் சதிஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.