நகராட்சி கவுன்சிலரின் கணவர் உண்ணாவிரதம்
அதிராம்பட்டினத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு நகராட்சி கவுன்சிலரின் கணவர் உண்ணாவிரதம் இருந்தார்.
அதிராம்பட்டினத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு நகராட்சி கவுன்சிலரின் கணவர் உண்ணாவிரதம் இருந்தார்.
கவுன்சிலரின் கணவர்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அஸ்லம். இவர் அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆவார். தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. பொருளாளராகவும் உள்ளார். இவருடைய மனைவி சித்தி ஆயிஷா, தற்போது அதிராம்பட்டினம் நகராட்சி 2-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.
இந்த நிலையில் சித்தி ஆயிஷா தனது 2-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாலை, வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரும்படி கடந்த மாதம் (மே) 19-ந் தேதி மனு அளித்தார்.
உண்ணாவிரதம்
இந்த மனு நகரசபை கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்படவில்லை. இதை கண்டித்தும், அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் சித்தி ஆயிஷாவின் கணவர் அஸ்லம் நேற்று தனது ஆதரவாளர்களுடன் அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தார்.
அதிராம்பட்டினம் நகரசபை தலைவராக தி.மு.க.வை சேர்ந்தவர் பதவியில் உள்ள நிலையில் தி.மு.க. கவுன்சிலரின் கணவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது அதிராம்பட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேச்சுவார்த்தை
நேற்று மாலை வரை உண்ணாவிரதம் நீடித்தது. இந்த நிலையில் பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன், நகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.