மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சாரநத்தம் ஊராட்சி வேடம்பூர் பகுதியில் இருந்து கொக்கலாடி செல்லும் சாலையில் உள்ள வாய்க்கால் வடிகால் பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் கட்ட வேண்டும். சாரநத்தம் மயானத்துக்கு செல்லும் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் தடுப்புச்சுவர் கட்டவேண்டும். பூனாயிருப்பு ஊராட்சி தெற்கு வழி மண் சாலை, மாணிக்கமங்கலம் ஊராட்சி சிவபுரி-கல்விக்குடி இணைப்பு சாலை ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆலங்குடி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு கட்சி ஒன்றிய செயலாளர் ராதா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலியபெருமாள், மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். வலங்கைமான் தாசில்தார் சந்தான கோபால கிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.