கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: 2-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்


கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: 2-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
x

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கான்கிரீட் தளம்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதன்பேரில் நீர்வள ஆதாரத்துறை சார்பில் வாய்க்காலில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஆனால், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைத்தால், கசிவு நீர் மூலமாக பயன்பெறும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள், 100-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும். எனவே, வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க கூடாது என கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைப்பது தொடர்பான விதியை திருத்தம் செய்து, கீழ்பவானி வாய்க்காலில், பழைய கட்டுமானங்களில் உள்ள மராமத்து பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். புதிதாக வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க கூடாது. வாய்க்காலின் மண் கரை மண் கரையாகவே தொடர வேண்டும்.

2-வது நாளாக...

கசிவுநீர் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு, பெருந்துறை ரோடு வாய்க்கால் மேடு பகுதியில் நடந்து வரும் இந்த போராட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை தாங்கினார். நேற்று 2-வது நாளாக கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் மற்றும் பாசனப்பகுதி விவசாயிகள், குடிநீர் ஆதாரம் பெறும் கிராம மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: 2-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

இதற்கிடையில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் கீழ்பவானி வாய்க்கால் பாசன வசதி பெறும் கிராமங்களில் உள்ளவர்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு, தாசம்புதூர் மாரியம்மன் கோவிலில் இருந்து நல்லாம்பட்டி, பெத்தாம்பாளையம், கருங்கரடு, நசியனூர் தோட்டானி பெருமாள் கோவில் வழியாக உண்ணாவிரத பந்தலுக்கு நடைபயணமாக செல்கிறார்கள்.


Next Story