ஈரோட்டில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் என்ஜின் டிரைவர்கள் உண்ணாவிரத போராட்டம்


ஈரோட்டில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் என்ஜின் டிரைவர்கள் உண்ணாவிரத போராட்டம்
x

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் ரெயில் என்ஜின் டிரைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஈரோடு

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் ரெயில் என்ஜின் டிரைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

உண்ணாவிரத போராட்டம்

அகில இந்திய ரெயில் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் ஈரோடு ரெயில் நிலையம் முன்பு நேற்று காலை தொடங்கியது. இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் சேலம் கோட்டை தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். ஈரோடு கிளைச்செயலாளர் ஸ்ரீஜித் வரவேற்று பேசினார்.

சங்க தேசிய செயலாளர் கே.சி.ஜேம்ஸ் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். தேசிய துணைத்தலைவர் எம்.எம்.ரோலி, மத்திய ஒருங்கிணைப்பாளர் வி.பாலசந்திரன், தென் மண்டல செயலாளர் பாபுராஜன், துணைத்தலைவர் ஜி.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

விருப்ப பணியிட மாறுதல்

இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் வருமாறு:-

விருப்ப பணியிட மாறுதலை விரைந்து பதிவு செய்து மாறுதலுக்கான உத்தரவை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விருப்ப பணியிட மாறுதலை தடை செய்யும் தெற்கு ரெயில்வே துறையின் உத்தரவை திரும்ப பெற வேண்டும். சரக்கு ரெயில் என்ஜின் டிரைவர்களை 36 மணி நேரத்தில் வீடு திரும்ப வழிவகை செய்ய வேண்டும். பிற உபகரணங்களை சுமந்து செல்ல விதிக்கப்பட்ட உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். விதிகளை மீறி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை திரும்ப பெற வேண்டும்.

மேற்கண்ட 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த போராட்டத்தில் கோவை கிளைத்தலைவர் சி.சி.தேவதாஸ் உள்பட ரெயில் என்ஜின் டிரைவர்கள் பலர் கலந்துகொண்டனர். நேற்று விடிய, விடிய நடந்த இந்த உண்ணாவிரத போராட்டம் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.


Next Story