சேலத்தில் தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
சேலம்
தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் சார்பில் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது. கிளை தலைவர்கள் சாமிநாதன், தனபால் ஆகியோர் தலைமை தாங்கினர். கிளை செயலாளர்கள் செந்தில்குமார், பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ஞானத்தம்பி, தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் மாநில பொருளாளர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
உண்ணாவிரத போராட்டத்தில், தமிழகத்தில் அனைத்து நிலை தொழில்நுட்ப காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இத்துறையில் 12 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பயிற்றுனர்கள் மற்றும் உதவியாளர்களை முதல்-அமைச்சரின் தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பயிற்சியாளர்களுக்கு பயிற்சி கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே சீருடை, பாடப்புத்தகங்கள், காலணிகள் உள்ளிட்ட அரசு நல உதவிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.