கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரதம் அறிவிப்பு: ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை
கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரதம் அறிவிப்பை தொடர்ந்து ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்குரோடு பகுதி சுண்டிப்பள்ளத்தில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் செல்லும் பிரதான சாலையில் திண்டிவனம்- கும்பகோணம் சாலை விரிவாக்க திட்டத்தின் மூலம் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். ஜெயங்கொண்டம் குறுக்குரோடு பகுதியில் உள்ள ஹெலன் கெல்லர் செவித்திறன் குறையுடையோர் உயர்நிலைபள்ளிக்கு செல்ல சுரங்கபாதை வசதி செய்து தர வேண்டும். கங்கைகொண்டசோழபுரம் ஊராட்சிக்குட்பட்ட மண்மலைக்கும் உலகளந்தசோழனுக்கும் இடையே உள்ள கருவாட்டு ஓடையில் தரைபாலம் அமைக்க வேண்டும். குறுக்குரோடு பகுதியில் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இடமாக உள்ளதால் பொது சுகாதார கருதி கழிப்பறை வசதி செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாளை (வியாழக்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருந்தது. இதையடுத்து, ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் துரை தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் வாலண்டினா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை அரசு கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.