கருகும் வாழைக்கன்றுகளுக்கு தொழிலாளர்கள் மூலம் தண்ணீர் ஊற்றும் விவசாயிகள்
கருகும் வாழைக்கன்றுகளுக்கு தொழிலாளர்கள் மூலம் விவசாயிகள் தண்ணீர் ஊற்றுகின்றனர்.
ஜீயபுரம்:
அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் வயலில் நடப்பட்ட நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டன. பின்னர் உளுந்து பயிரிடப்பட்டது. இதையடுத்து தற்போது வாழைக்கன்றுகள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் செல்லக்கூடிய மிக முக்கியமான வாய்க்காலாக கருதப்படும் உய்யகொண்டான் வாய்க்காலில் தற்போது தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பலர் தண்ணீர் வந்த பிறகு வாழைக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபடும் முடிவில் உள்ளனர். ஆனால் ஆழ்துளை கிணறு வைத்திருப்பவர்கள், வாழைக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வயல்களில் டீசல் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டாலும், வெயிலின் தாக்கத்தால் வாழைக்கன்றுகளுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. ஆழ்துளை கிணற்றிலும் குறைவான தண்ணீரே உள்ள நிலையில் விடிய, விடிய மோட்டார் ஓடினாலும் குறிப்பிட்ட அளவே தண்ணீர் பாய்ச்ச முடிகிறது. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் ஒரு நாளைக்கு ரூ.200 வீதம் தொழிலாளர்களுக்கு கூலி கொடுத்து, நடப்பட்டு கருகும் நிலையில் உள்ள வாழைக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தொழிலாளர்கள் அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குடத்தில் தண்ணீரை கொண்டு வந்து, வாழைக்கன்றுகளுக்கு ஊற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.