மஞ்சள் நோய் தாக்குதலால் கரும்பு வளர்ச்சி பாதிப்புவாழ்வா? சாவா? நிலையில் இருப்பதாக விவசாயிகள் கண்ணீர்
கபிஸ்தலம் பகுதியில் மஞ்சள் நோய் தாக்குதலால் கரும்பு வளர்ச்சியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக வாழ்வா? சாவா? நிலையில் இருப்பதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
கபிஸ்தலம் பகுதியில் மஞ்சள் நோய் தாக்குதலால் கரும்பு வளர்ச்சியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக வாழ்வா? சாவா? நிலையில் இருப்பதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
கரும்பு சாகுபடி
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் அருகே உள்ள வடசருக்கை, வீரமாங்குடி, தேவன்குடி, சோமேஸ்வரபுரம், மணலூர், கணபதிஅக்ரஹாரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 800 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் கரும்பு பயிர்களில் ஒரு விதமான மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டு கரும்புகள் வளர்ச்சி குன்றி ஒரு அடி உயரத்தில் உள்ள கரும்பிலேயே 8 கணுக்களும் உள்ளது.
கரும்பின் தோகையை உரிக்கும் போது உள்ளே எறும்பு, பூச்சி போன்றவை உள்ளது. வளர்ச்சி இல்லாததால் கரும்பு பயிர்களை வயலிலேயே அழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கில் செலவு செய்து சாகுபடி செய்த விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
வாழ்வா? சாவா?
கரும்பு பயிர்கள் சாகுபடி செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனையுடன் கூறுகிறார்கள். கடன்களை வாங்கி கரும்பு விவசாயம் செய்து வரும் சூழலில், இந்த பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் வாழ்வா? சாவா? என்ற நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
மத்திய, மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளாக இல்லாத நோய்
மஞ்சள் நோய் தாக்குதல் விவசாயிகள் கருத்து கணபதி அக்ரஹாரத்தை சேர்ந்த சீனிவாசன் கூறியதாவது:-
சமீபகாலமாக கரும்பு பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. கரும்பு பயிர் விதைத்து 6 மாதங்களாகியும் 20 நாள் பயிர் போல காட்சி அளிக்கிறது. மஞ்சள் நோய் தாக்குதலால் சரியான விளைச்சல் இல்லாமலும் நோய் தாக்கி கரும்பு பயிர்கள் நாசம் அடைந்து வருகின்றன. 40 ஆண்டுகளாக இல்லாத இந்த நோய் தற்பொழுது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் காலங்களில் கரும்பு பயிர் செய்யவா? வேண்டாமா? என்று ேயாசிக்கும் நிலையில் உள்ளோம். கடலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்களில் கரும்புகளை தாக்கும் மஞ்சள் நோய் குறித்து ஆய்வு செய்து நோய் பரவலை தடுக்க வேண்டும்.
ரூ.30 ஆயிரம் இழப்பீடு
சருக்கை ஊராட்சி மன்ற தலைவர் ஜெகநாதன்:-
சருக்கை கிராமத்தில் பல்வேறு இடங்களில் விதைக்கப்பட்டுள்ள கரும்பில் மஞ்சள் நோய் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது இதனால் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். இந்த பகுதிகளில் கரும்பு பயிர் செய்வதை தவிர்த்து நெல் நடவு செய்யலாம் என்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர். மஞ்சள் நோய் தாக்குதலுக்குள்ளான அனைத்து கரும்பு வயல்களையும் கணக்கிட்டு விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.