தண்ணீருக்கு பதிலாக ஆகாயத்தாமரைகளாக காட்சி அளிக்கும் ஆறுகள்


தண்ணீருக்கு பதிலாக ஆகாயத்தாமரைகளாக காட்சி அளிக்கும் ஆறுகள்
x
தினத்தந்தி 23 Dec 2022 12:45 AM IST (Updated: 23 Dec 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

வாய்மேடு பகுதியில் ஆறுகளில் தண்ணீருக்கு பதிலாக ஆகாயத்தாமரைகளாக காட்சி அளிக்கிறது. இதனால் பயிர்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நாகப்பட்டினம்

வாய்மேடு பகுதியில் ஆறுகளில் தண்ணீருக்கு பதிலாக ஆகாயத்தாமரைகளாக காட்சி அளிக்கிறது. இதனால் பயிர்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வாழ்வாதாரமாக விளங்கும் ஆறுகள்

நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியாக வாய்மேடு உள்ளது. ஆறுகளில் வரும் தண்ணீர், மழைநீர் ஆகியவற்றை கொண்டே இந்த பகுதியில் பெரும்பாலும் விவசாயம் நடக்கிறது. ஆறுகளில் தண்ணீர் இல்லை என்றால் இந்த பகுதியில் விவசாயம் என்பதே கேள்விக்குறியாகி விடும்.

ஆகையால் ஆறுகள் இந்த பகுதி விவசாயிகள் வாழ்வாதாரமாக உள்ளன. வாய்மேடு பகுதியில் உள்ள மானங்கொண்டான் ஆறு, முள்ளியாறு ஆகியவற்றின் மூலமாக தாணிக்கோட்டகம், தகட்டூர், வடமழை, மருதூர், பஞ்சநதிக்குளம், தென்னடார், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், ஆதனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ஆகாயத்தாமரைகள்

இந்த 2 ஆறுகளிலும் நீரோட்டத்துக்கு இடையூறாக ஆகாயத்தாமரைகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் ஆறுகளில் தண்ணீருக்கு பதிலாக பச்சை பசேலென ஆகாயத்தாமரைகளாக காட்சி அளிக்கிறது. ஆகாயத்தாமரைகள் ஆறுகளை ஆக்கிரமித்து வளர்ந்திருப்பதால் அதிகமாக வரும் தண்ணீர் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆறுகளில் இருந்து ஆகாயத்தாமரைகளை அகற்றி நீரோட்டம் சீராக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

கதவணை உடையும் அபாயம்

இதுகுறித்து தகட்டூரை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரின்ஸ் கோபால் ராஜா கூறியதாவது:- தகட்டூரில் இருந்து தென்னடார் வரை உள்ள முள்ளியாற்றில் ஆகாயத்தாமரைகளாக காட்சி அளிக்கின்றன. இந்த ஆற்றில் உள்ள கதவணை அருகிலும் ஆகாயத்தாமரைகள் தேங்கி உள்ளன. இதன் காரணமாக வெள்ளம் வரும்போது கதவணை உடையும் அபாயம் உள்ளது.

மழைக்காலங்களில் தண்ணீர் வேகமாக வெளியேறாமல் தாமதமாக வெளியேறுவதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. ஆகாயத்தாமரை அதிக அளவில் அடைத்து கொண்டிருப்பதால் வேகமாக தண்ணீர் வடியாமல் விவசாயிகளுக்கு மிகுந்த கஷ்டத்தை கொடுக்கிறது.

சுகாதார சீர்கேடு

தாணிக்கோட்டகத்தை சேர்ந்த கரு.நாகராஜ்:-

தாணிக்கோட்டகத்தில் இருந்து ஆதனூர் வரை உள்ள 20 கிலோமீட்டர் தொலைவிற்கு செல்லும் மானங்கொண்டான் ஆற்றில் ஆகாயத்தாமரைகள் மண்டி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அங்கு ஆகாயத்தாமரைகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. ஆற்றில் மீன்கள் போன்ற உயிரினங்கள் செத்து மடியும் சூழல் உள்ளது. மழைக்காலங்களில் ஆகாயத்தாமரைகளினால் ஆற்றில் தண்ணீரின் வேகம் குறைகிறது. இதனால் வயல்களை வெள்ளம் சூழ்ந்து, சாகுபடி செய்த பயிர்கள் முழுவதும் வீணாகி, விவசாயிகள் கடும் நஷ்டத்துக்கு ஆளாகின்றனர். சிறப்பு கவனம் செலுத்தி ஆற்றில் இருந்து ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்றார்.


Next Story