ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த விவசாய சங்கத்தினர்


ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த விவசாய சங்கத்தினர்
x

ஆலோசனை கூட்டத்திற்கு அதிகாரி வராததை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,


ஆலோசனை கூட்டத்திற்கு அதிகாரி வராததை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலோசனை கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் வன விரிவாக்க மையத்தில் விவசாயிகள், வனத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வனவிலங்குகளால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் நஷ்டங்களை ஈடு கட்டுவது குறித்தும் விவசாய சங்கத்தினர் விரிவாக பேச முடிவு செய்திருந்தனர். இந்த கூட்டத்தில் வருவாய் துறை சார்பில் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் செந்தில்குமார், ராஜபாளையம் துணை தாசில்தார் ஆண்டாள், வனத்துறை அதிகாரி கார்த்திக், உதவி வன அதிகாரி நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

புறக்கணிப்பு

அதேபோல கூட்டத்தில் விவசாய சங்கத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக இணைஇயக்குனர் கலந்து கொள்ளவில்லை.

அவர் கலந்து கொள்ளாததால் ஏமாற்றம் அடைந்த விவசாய சங்கத்தினர் பிரச்சினையை பற்றி பேசுவதற்கு அதிகாரிகள் வராததற்கு கண்டனம் தெரிவித்து கூட்டத்தை புறக்கணித்தனர். இதையடுத்து அவர்கள் வன விரிவாக்க மையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக இணை இயக்குனரை மாற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story