விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கடையத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கடையம்:
கடையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் மோசடியை தடுத்திட வேண்டும். வன விலங்குகளிடமிருந்து விவசாயத்தை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க கடையம் ஒன்றிய செயலர் முத்துராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட துணைத்தலைவர் வேலுமயில் தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலர் கணபதி நிறைவுரையாற்றினார்.
கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடையம் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் கிறிஸ்டோபர் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.